Wednesday 1 February 2012

தலைகீழாய் வளரும் தக்காளி

பொதுவாக தக்காளி செடியின் வேர் கீழ் நோக்கியும் தண்டு பகுதி புவி ஈர்ப்பு விசையை எதிர்த்து மேல் நோக்கியும் வளர்வது வழக்கம். இதுவே தக்காளியை மேலிருந்து கீழ்நோக்கி வளர்த்தால் எப்படி இருக்கும்?
இந்த முயற்சியைத்தான் “டாப்சி டர்வி’ என்ற நிறுவனம் முயற்சி செய்து பார்த்து, அவ்வாறு வளர்ப்பதற்கு தேவையான தொட்டியையும் வடிவமைத்து அமெரிக்க சந்தையில் விற்பனை செய்துவருகிறது.


ஒரு செடி கீழிருந்து மேல்நோக்கி வளரும்போது அது நீர் மற்றும் மண்ணிலிருந்து உறிஞ்சும் சத்துக்களை புவி ஈர்ப்பு விசையை எதிர்த்து கீழிருந்து மேல்நோக்கி அனுப்ப வேண்டியுள்ளது. எனவே செடியை மேலிருந்து கீழ்நோக்கி வளர்க்கும்போது உணவு பொருளானது புவி ஈர்ப்பு விசையை நோக்கி கீழே பாய்ந்து காய் பகுதிகளை நோக்கி செல்வதால் விளைச்சல் அதிகம் இருக்கும் என்கிறது அந்த நிறுவனம்.
அது மட்டுமின்றி செடி மேலே வளர்வதால் புழு மற்றும் நோய் பாதிப்பு பெருமளவு குறைகிறது என்கிறார்கள்.
நகர்புறங்களில் patio மற்றும் பால்கனிகளில் செடி வளர்ப்பதற்கு ஏற்ற அமைப்பு இது.
நான் இந்த செடி வளர்ப்பு தொட்டியை வீட்டில் வளர்த்து சோதனை செய்து பார்த்தேன். தக்காளி செடி நன்றாகவே வளர்கிறது. என் வீட்டு கொல்லை பகுதியில் வெயில் குறைவாக கிடைப்பதால் இதன் உண்மையான விளைச்சலை என்னால் கணிக்க முடியவில்லை.
ஆரம்ப காலங்களில் அடிக்கும் வேகமான காற்று இந்த செடியின் தண்டினை முறிக்க வாய்ப்பு உள்ளது. நான் வளர்த்தபோது ஒரு செடியின் தண்டு சிறிது முறிந்தாலும் அது தொடர்ந்து வளர்ந்து, அந்த கிளைகளில் காய்களையும் வைத்தது.
அமெரிக்காவில் நிறைய பேர் பால் கேனை மேலே கட்டி தொங்கவிட்டு இது போன்றே தக்காளி வளர்த்து முயற்சி செய்துள்ளனர்.
இதுபோன்ற மாதிரிகளை உருவாக்குவதும் மிக எளிது. உர சாக்கு பையை கிழித்து வட்ட வடிவில் தைத்து இதே போன்ற பிளான்டர்களை எளிதாக நாமே உருவாக்கலாம்.
இதே முறையில் நிறைய செடி வளர்க்கவும் புதிய வகை மாதிரிகளை எளிதில் உருவாக்கலாம்.
இந்தியாவில் இதுபோல் புதிய மாதிரிகளை வடிவமைத்து, உற்பத்தி செய்து விற்றால் உற்பத்தி செய்பவருக்கு பணமும் கிடைக்கும். மக்களும் வீட்டிலேயே காய்கறி வளர்க்க வாய்ப்பும் கிடைக்கும்.
முக்கியமாக கிராமப்புற சுய உதவி குழுக்கள் மூலம் இதை உற்பத்தி செய்வதன் மூலம் கிராமப்புறத்தில் நிறைய பேருக்கு வேலை கிடைக்கவும் வாய்ப்பு உள்ளது.

1 comment:

  1. very good articles about agri based.....
    continue the same....
    thanks
    babu
    contactbabu@yahoo.com

    can i get your e-mail please

    ReplyDelete